தைப்பூச விரதம் இருப்பது எப்படி..? பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன..?

தைப்பூசம் - 1
28 - 1 - 2021 தை மாதம் 15ம் நாள் வியாழன் அதிகாலை (புதன் இரவு) 3 - 46 மணி முதல் (வியாழன் / வெள்ளி) அதிகாலை 4 - 10 மணி வரை தைப்பூச திருநாளாகும்.
பூச நட்சத்திரம் ஜனவரி 28ஆம் தேதியான அதிகாலை 3 - 46 மணியிலிருந்து தொடங்குகிறது என்பதால் விரதத்தின் போது எப்படி இருக்க வேண்டுமோ அந்த விதிகளை இந்த நேரத்திலிருந்து கடைப்பிடிப்பது நல்லது.
தைப்பூசம் நாளில் காலையில் எழுந்ததும், வீட்டை சுத்தம் செய்து குளித்துவிட்டு, நெற்றி நிறைய திருநீறு அணிந்து, வீட்டில் விளக்கேற்றி தெய்வங்களை வழிபட்டு விரதத்தை தொடங்கலாம்.
1. குறிப்பாக முருகப்பெருமானை வழிபட்டு, கந்த கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்த, கலிவெண்பா உள்ளிட்ட முருகப்பெருமானுக்கு உகந்த பாடல்களை காலையிலிருந்து மாலை வரை படிக்கலாம். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று பூஜையில் பங்கேற்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.
2. தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, திருநீறு, உத்திராட்சம் அணிந்து சிவபெருமானை வழிபட வேண்டும். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் பாராயணம் செய்யலாம். உணவு உண்ணாமல் 3 வேளைகளிலும் பால், பழம் சாப்பிடலாம். மாலையில் கோவிலுக்குச் சென்று சிவ பூஜையில் பங்கேற்று சிவனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.
3. தைப்பூசம் சிவபெருமானுக்கும், முருக பெருமானுக்கும் விசேஷமானது. பூச நட்சத்திரத்தின் அதி தேவதையான குருபகவானுக்கும் விசேஷமானது. அன்று எல்லா முருகன் தலங்களிலும் முருகப்பெருமான் வீதி உலா வருவார்.
4.தைப்பூசத்தன்று தான் உலகத்தின் முதல் உயிப்பு சக்தியான தண்ணீர், சிவபெருமானால் தோன்றியது. அதன் தொடர்ச்சியாக நிலம், ஆகாயம், நெருப்பு, காற்று ஆகியவையும், அடுத்தடுத்து அனைத்து உயிரினங்களும் தோற்றுவிக்கப்பட்டது.
5. இரணியவர்மன் எனும் மன்னன் சிதம்பரத்துக்கு வந்து நிறைய திருப்பணிகள் செய்தான். அவன் நடராஜ பெருமானை ஒரு தைப்பூச நாளில்தான் நேருக்கு நேர் சந்திக்கும் பேற்றைப் பெற்றான்.
6. வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஒரு தை மாத வெள்ளிக்கிழமை பூச நட்சத்திரத்தன்று தான் ஒளியானார். இதனைக் குறிக்கும் விதமாக அவர் ஒளியான வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத்தன்று இலட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள்.
7. தேவர்களின் குருவான பிரகஸ்பதியின் நட்சத்திரம் பூசமாகும். எனவே தைப்பூசம் தினத்தன்று குரு வழிபாடு செய்வது மிகுந்த பலனைத் தரும்.
8. தைப்பூசத்தன்று பழனிக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள் வழிநெடுக முருகனை நினைத்து பாடியபடி வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். அந்த பாடல்கள் ‘காவடி சிந்து’ என்று அழைக்கப்பட்டன.
9. தைப்பூசத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இருந்து காவிரி தீர்த்தம் எடுத்து தீர்த்தக் காவடியாக வருவதை கொங்கு மண்டல மக்கள் மிகவும் சிறப்பாக நினைக்கிறார்கள்.
10. முருகப்பெருமானின் அருள் பெற இருக்கும் விரதங்களில் தைப்பூசம் விரதமே முதன்மையானதாக கருதப்படுகிறது.
11. தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகபிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
12. தைப்பூசத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரருக்கு தேன் அபிஷேகம் செய்யப்படும்.
13. தைப்பூசத் திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் என்றொரு பழமொழி உண்டு.
14. தைப்பூச தினத்தன்று சிவாலயங்களில் வழிபாடு செய்தால் கணவன், மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரியாத வரத்தைப் பெறலாம்.
15. வாயு பகவானும், வர்ண பகவானும், அக்கினி பகவானும் ஈசனின் அதீத சக்தியை உணர்ந்த நாளாகவும் இந்நாள் போற்றப்படுகிறது. அதாவது இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக இறைவனே இருக்கிறான் என்பது உணர்த்தப்பட்ட புண்ணியநாள், தைப்பூச நன்னாளாகும்.
16. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், மொரிஷியஸ், பிஜி, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இலங்கை என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் தைப்பூசம் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
17. தை மாத பவுர்ணமியும், பூசம் நட்சத்திரமும் கூடி வரும்போது சிறப்பு வழிபாடுகள் செய்வதே தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வாகும்.
18. தைப்பூச நன்னாளில் ஸ்ரீரங்கம், ரங்கநாதப் பெருமாள் தன் தங்கை சமயபுரத்தம்மனுக்கு சீர் வரிசைகள் கொடுப்பார். இதையட்டி சமயபுரத்தில் 10 நாட்கள் திருவிழாவும் அம்மன் புறப்பாடும் சிறப்பாக நடைபெறும்.
19. தைப்பூசத்தன்று பழனி முருகனின் அபிஷேக ஆராதனையை தரிசிப்பதால் நம்முடைய சகல பாவங்களும் தீரும். மேலும் இந்த நன்னாளில் சுப காரியங்கள், செய்தால் தம்பதிகள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் கிடைக்கும்.
20. தைப்பூச நன்னாளில்தான் ஞானசம்பந்தர் மயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து அப்பெண்ணை உயிருடன் எழுந்து வரும்படி பதிகம் பாடி, உயிர்ப்பித்தார். இது மயிலை கபாலீஸ்வரர் ஆலயத் தில்தான் நடந்தது. இதை மயிலைப்புராணம் கூறுகிறது. இச்சன்னதி மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் கொடி மரம் அருகே உள்ளது.