ஜெய்பீம் திரைவிமர்சணம்

ஜெய்பீம் தமிழ் சினிமாவில் யதார்தத்தின் சிகரத்தை தொட்ட காவியம்.

ஜெய்பீம் திரைவிமர்சணம்

ஒரு படைப்பைக் கண்டபின் அதைப் பாராட்ட வார்த்தைகள் வராமல் தவித்தது இதுவே முதல்முறை. காரணம், எந்தளவுக்கு இப்படைப்பை உயர்த்தி எழுத நினைத்தாலும் அதை விட மிக உயரத்தில் தலைசிறந்து நிற்கிறது இத்திரைப்படம்.

வலிமையான திரைக்கதை. துவங்கிய முதல் நொடியில் தேவரா, கவுண்டரா, வன்னியரா வெளியே போ.. ஒட்டரா குறவரா இப்படி வந்து நில்லு என இதுதான்டா கதை என நம் மனசாட்சியை பொளேரென அறையும் ஆரம்பக் காட்சியை சத்தியமாக தமிழ்சினிமாவில் இப்போது தான் முதல்முறையாகப் பார்க்கிறேன். 

அங்கு துவங்கும் பதைபதைப்பை மணிகண்டன் உட்பட அனைத்துக் கதாபாத்திரங்களும் தங்களுக்கேயுரிய இயல்பான நடிப்பில் படம் நெடுகிலும் கடத்துகிறார்கள்.

எந்த விநாடியும் டாகுமெண்டரியாக மாறிவிடும் அபாயம் கொண்ட கதையை ரத்தம் சிந்தி உலக சினிமாவாகச் செதுக்கியிருக்கிறார்கள். 

கதைமாந்தர்கள் வாங்கும் ஒவ்வொரு அடியிலும் மூச்சே நின்றுவிடுகிறது. ஆண், பெண், அங்க, மான வெட்கப் பேதமின்றி தோலுரித்து, துகிலுரிக்கப்படும் போது இதயம் உறைந்து விடுகிறது.
 
ஆனால் காவல் நிலையங்களில் நிஐத்தில் நிகழ்பவை இதைவிடக் கொடூரம் என்பதை நாம் உணரும் போது வெட்கித் தலைகுனிந்து, கண்ணீரால் கரைய வேண்டியிருக்கிறது.

எத்தனை ராஜாக்கண்ணுகள், ஜெயராஜ்கள், பென்னிக்குகள். மனமெங்கும் மிளகாய்பொடி தூவியது போன்ற வலி. நல்லவர் கெட்டவர் என அனைத்துப் போலீசாரும் இப்படத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள். 

உங்களால் இறந்தவர்களின் ஆன்மா சில கணங்களாவது அமைதியடையும்.

இந்தியா முழுவதும் ஜெய்பீம் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது. பேதங்கள் கடந்து மக்கள் கொண்டாடுகிறார்கள். 

கண்ணீர் வழிய, உதடுகள் துடிக்கப் பாராட்டுகிறார்கள். மொழி வேறு எனினும் வலி ஒன்று தானே. மிக விரைவில் உலகளவில் இத்திரைப்படம் பேசப்படும்.

ஒன்றை மட்டும் சிந்தித்துப்பாருங்கள் இங்குள்ள எத்தனை தயாரிப்பாளர்கள் இவ்வாறு பழங்குடியினருக்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றி பேசும் கதையை தயாரிக்கு முன்வருவார்கள், அதுவும் இக்காலத்தில்

ஆனால் நம்மிடம் ஒருவர் இருக்கிறார். லாப, நஷ்ட அரசியல் எதிர்ப்பெல்லாம் தட்டித் தூக்கியெறிந்து விட்டு எப்போதும் முன்னேறிச் செல்லும் எதற்கும் துணிந்தவர்.

இவர் போல ஒருவர் இல்லாத குறையே இதுபோன்ற அற்புதமான படைப்புகள் எங்கள் மொழியில் வருவதில்லை என பிறமாநிலத்தார் இன்று ஆதங்கம் கொள்கிறார்கள்.

இருளை விலக்கி ஒளி தருவது சூரியனாக இருக்கலாம். ஆனால் சமூகத்தால் விலக்கப்பட்டு ஒதுங்கி நிற்கும் இருளர்கள் தோளோடு தோள் நின்று அவர்தம் வாழ்வியலை ரத்தமும் சதையுமாகப் பேசுவது என்பது இத்தகத்தாய சூரியனால் சாத்தியமடைந்திருக்கிறது.

அதுவும் இறுதி காட்சியில், அந்த குட்டி பெண் தயக்கத்தோடு தின நாளிதழை எடுத்து சூர்யாவை பார்க்க, சூர்யா கண்ணசைக்க, அந்த குட்டி பெண் அவரை போலவே கால் மீது கால் போட்டு கொண்டு, நாளிதழை படிப்பது காவியம்.

மொத்த கதையின் கருவும்
ஒரே சீனில் அசத்தலாக.

நன்றி சார். Surya Donates என்ற வார்த்தைகளை மட்டும் கூகுளில் தேடுங்கள், இம்மாமனிதன் ஏன் தமிழர்கள் மற்றும் நம் தமிழகத்தின் பெருமை என்பது புரியும். 
ஒன்றைச் செய்து விடுங்கள் !

சந்துரு எனும் சூர்யா
ராஜாக்கண்ணு எனும் மணிகண்டன்,
செங்கேனி எனும் லிஜோமோல் ஜோஸ்
SI குருமூர்த்தி எனும் தமிழ் (டானாக்காரன் இயக்குநர் )
மொசக்குட்டி எனும் ராஜேந்திரன்
இருட்டப்பன் எனும் சின்ராசு
பச்சையம்மாள் எனும் சுபத்ரா
ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர்
எடிட்டர் பிலோமின்ராஜ்
இவர்கள் அனைவரையும் 
ஒருங்கிணைத்த கூட்டத்தில் ஒருவனாக - 
இயக்குநர் த.செ. ஞானவேல் 
படத்தின் ஆரம்பக் காட்சி போல,

விழாக்களுக்கு வரும் போது இவர்களை தடுத்து, தனித்து நிறுத்துங்கள். இருக்கும் உலக விருதுகள் மொத்தத்தையும் இவர்கள் கையில் தந்துவிட்டு நெற்றியில் ஒரு முத்தத்தையும் பரிசளித்து விடுங்கள்.

இக்கலைஞர்களின் அசாதரண உழைப்பிற்கு அதுவே நியாயம் செய்யும்.

விவிலியத்தில் ஒரு கோட்பாடு, மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரையும் தவறை உணர்ந்து, மனம் திருந்த வைக்கும் பரிசுத்தம் எதுவோ, அதுவே இறைவன் என்கிறது.

உயிரைப் படைத்தவனின் 
இம்மேன்மையை ஒரு உன்னதப் 
படைப்பும் தந்திருப்பதால்,
ஜெய்பீமும் நம் இறைவனே !!