ரீமேக் ஆகிறது 'த்ரிஷ்யம் 2’

இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்த நிலையில், 'த்ரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியுள்ளது. கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு இடையில் உருவாகி வந்த இப்படம், சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. முதல் பாகத்திற்கு இணையான வரவேற்பை இரண்டாம் பாகமும் பெற்று வருகிறது. இவ்வரவேற்பைக் கண்ட பிறமொழித் தயாரிப்பு நிறுவனங்கள், இப்படத்தை தங்கள் மொழியில் ரீமேக் செய்வதற்கான முயற்சியில் இறங்கியுள்ளன. இந்த நிலையில், 'த்ரிஷ்யம் 2' படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
தெலுங்கிலும் ஜீத்து ஜோசப் இயக்க, வெங்கடேஷ், மீனா, நதியா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இப்படத்தின் பூஜை மார்ச் 1-ஆம் தேதி நடைபெறுகிறது. படப்பிடிப்பு மார்ச் 5-ஆம் தேதி தொடங்கவுள்ளது.