வண்ணாத்துப்பூச்சி விளைவு உண்மையா? | Butterfly Effect

பட்டாம்பூச்சி விளைவு என்றால் என்ன.? உலகில் எங்கோ ஒரு மூலையில் ஒரு பட்டாம்பூச்சி தன்னுடைய சிறகுகளை படபடத்துக்கொள்வதன் விளைவாக மறுமூலையில் ஒரு மிகப்பெரிய புயல் உருவாகக்கூடும்.

வண்ணாத்துப்பூச்சி விளைவு உண்மையா? | Butterfly Effect

உலகில் எங்கோ ஒரு மூலையில் ஒரு பட்டாம்பூச்சி தன்னுடைய சிறகுகளை படபடத்துக்கொள்வதன் விளைவாக மறுமூலையில் ஒரு மிகப்பெரிய புயல் உருவாகக்கூடும்.

நமக்கு புரியிற மாதிரி சொல்லனும்னா

இங்க அடிச்சா அங்க வலிக்கும்.

வலிக்கும் என்பதை விட வலிக்கலாம் என சொல்லலாம்.

இது ஒரு உருவகம் (Metaphor) மட்டுமே. ஒவ்வொரு முறை வண்ணத்து பூச்சி சிறகடிக்கும் போது எங்கோ ஒரு இடத்தில் புயலடிக்கும் என அர்த்தமில்லை. சிறு செயல்கள் தொடர்பே இல்லாத பெரிய விளைவை உருவாக்கும் என்பதே பொருள்

பட்டாம்பூச்சு விளைவு என்பது நேரியல்சாரா இயக்கம் (non-linear dynamics) என்ற இயற்பியல் பிரிவினுள் உள்ள ஒழுங்கின்மை கோட்பாடு (chaos theory) என்ற கருதுகோளினை விளக்க உருவான ஒரு சிந்தனை ஆய்வு (thought experiment) அல்லது ஒப்புமை விளக்கம் (analogy) எனலாம்!

நேரியல்சாரா அமைப்புகளைப் பற்றி பேசும் முன் நேரியல் அமைப்புகளைப் பற்றிப் பேசுவோம்:

ஒரு இயற்பியல் அமைப்பில் நிகழும் ஒரு செயலுக்கு (விளைவு) ஒரு காரணி (தூண்டல் - stimulus) இருக்கும்.

எடுத்துக்காட்டாய், பால் காய்ச்சுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள், பாலின் வெப்பநிலை (temperature) அடுப்பிலிருந்து வரும் வெப்ப ஆற்றலை (heat energy) பொருத்து இருக்கும். நிறைய வெப்ப ஆற்றலைக் கொடுத்தால் (அடுப்பைப் பெரியதாக எரியவிட்டால்) பாலின் வெப்பநிலை அதிகரிக்கும், குறைவான வெப்ப ஆற்றலைக் கொடுத்தால் பாலின் வெப்பநிலை குறையும் - இதுவே தூண்டல்-துலங்கல் பண்பு.

பாலின் வெப்பத்தையும் அடுப்பிலிருந்து வரும் வெப்ப ஆற்றலையும் ஒரு வரைபடமாக (graph plot) வரைந்தால் அது கிட்டத்தட்ட ஒரு நேர்க்கோடாக இருக்கும்.

இம்மாதிரியான அமைப்புகளைத்தான் நேரியல்சார் அமைப்பு என்கிறோம்.

இம்மாதிரியான நேரியல் அமைப்புகளில் விளைவு என்ன என்பதை காரணியின் அளவை மட்டுமே வைத்து ஊகித்துவிடலாம். (அதாவது, இவ்வளவு வெப்ப ஆற்றல் கொடுத்தால் பால் இவ்வளவு வெப்பநிலைக்குச் சூடாகும் என்று எளிதில் கணித்துவிடலாம்! இதில் எந்த மாற்றமும் இருக்காது!)

ஆனால், எல்லா அமைப்புகளும் இப்படி எளிதானவையாக இருந்துவிடுவதில்லை - எனவேதான் ‘நேரியல்சாரா அமைப்பு’களும் உள்ளன!

ஒரு நேரியல்சாரா அமைப்பில் காரணி-விளைவு ஆகியவற்றின் இடையிலான தொடர்பு ஒரு எளிய நேர்க்கோட்டு வரைபடமாக இருக்காது!

அதாவது, இந்த அளவு காரணியால் இந்த அளவு விளைவுதான் ஏற்படும் என்பதை ஊகிக்க இயலாது! அதில் பல்வேறு கூறுகளும் இடம்பெற்றிருக்கும்!

எடுத்துக்காட்டாய், காரணியின் ஒரு குறிப்பிட்ட அளவை நாம் கூட்டுவதன் மூலம் அடைந்தோமா அல்லது குறைப்பதன் மூலம் அடைந்தோமா என்பதைப் பொறுத்து விளைவின் அளவு மாறுபடும் (அதாவது, 100 அலகு என்ற அளவை 90-இலிருந்து 100 என்று உயர்த்தி அடைந்தோமா, அல்லது 110-இலிருந்து 100 என்று குறைத்து அடைந்தோமா என்பதைப் பொறுத்து விளைவின் அளவு வேறுபடும்!)

இவ்வாறே, பல நேரியல்சாரா அமைப்புகளின் விளைவுகள் தொடக்க நிலை மதிப்புகளில் (initial values) ஏற்படும் சிறிய மாற்றங்களினால் பெரிய வேறுபாட்டிற்கு உள்ளாகும்.

(எனவே, நம்மால் ஒரு குறிப்பிட்ட நிலையிலான விளைவை ஊகித்தல் எளிதானதாக இருப்பதில்லை, ஆகையினால்தான் இதனை ‘ஒழுங்கின்மை’ (chaos) என்கிறோம்!)

இப்படித் தொடக்க நிலையில் ஏற்படும் சிறிய மாற்றத்தினால் பின்வரும் விளைவில் ஏற்படும் பெரிய வேறுபாட்டை விளக்கத்தான் ‘பட்டாம்பூச்சி விளைவு’ என்ற கருத்தாக்கம் கையாளப்படுகிறது.

ஓரிடத்தில் உண்டாகும் புயல் எங்கோ எப்போதோ ஒரு சிறிய பட்டாம்பூச்சி தன் சிறகுகளை அசைத்ததன் விளைவாக இருக்கலாம் என்பதே இதன் கருதுகோள்.

அல்லது, அந்தப் பட்டாம்பூச்சியின் சிறகசைப்பின் காரணமாய் ஓரிடத்தில் ஏற்பட இருந்த புயல் ஏற்படாமலே போய்விட்டது என்றும் கொள்ளலாம்.

இதனால், பட்டாம்பூச்சிகள் புயலை உருவாக்குகின்றன என்பது பொருளல்ல - தொடக்க நிலையின் சிறிய வேறுபாடுகள் பின்வரும் விளைவில் பெரிய வேறுபாடுகளாக அமையும் என்பதே கருத்து!

கீழ்வரும் நிகழ்வொன்றின் மூலம் இன்னும் எளிதாக விளங்கி கொள்ள முடியும். 

ஆஸ்திரியா நாடு கலைகளுக்கு புகழ் பெற்றது என்பதை நாம் அறிவோம், வியன்னா நகரில் அகாடமி ஆப் பைன் ஆர்ட்ஸ்(Academy of Fine Arts) -இல் bohemian arts பயில ஒரு மாணவன் விண்ணப்பம் செய்கிறான். ஆனால் நமக்கெல்லாம் தூரதிஷ்டம் அவனுடைய விண்ணப்பம், அவன் விண்ணப்பித்த இரு முறையும் நிராகரிக்க படுகிறது. இதன் விளைவாக வருங்காலத்தில் அந்த நாட்டிற்கு வர போகும் அழிவு தெரிந்து இருந்தால், அவன் விண்ணப்பத்தை மதிப்பீடு செய்த பேராசிரியர் அதை நிராகரித்திருக்க வாய்ப்பே இல்லை.

அதனால் மனமுடைந்த மாணவன் , தான் கலைஞன் ஆக வேண்டும் என்ற கனவை விடுத்து ஜெர்மன் ராணுவத்தில் படை வீரனாக சேருகிறான். அந்த மாணவன் 'அடால்ப் ஹிட்லர்' - ஆல் உலகம் எத்தகைய பேரழிவை சந்தித்தது என்பதை நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இதை விட பட்டாம்பூச்சி விளைவிற்கு சிறந்த உதாரணம் இருக்க முடியாது என்று நினைக்கிறன்.

இதில் ஹிட்லர் பொஹெமிய கலைஞர் ஆகி இருந்தால், ஜெர்மன் ராணுவத்தில் சேர்ந்து இருக்க மாட்டார், அதில் சேராவிடில் இரண்டாம் உலக போர் நிகழ்ந்திருக்காது, உலகம், வாழ்கை ,அறிவியல் என நம்மை சுற்றி இருக்கும் அனைத்தும் ஒரு சிக்கலான நேரியல் அல்லாத அமைப்பு(Complex Non-Linear System), அதில் நடக்கும் ஒரு சிறிய மாற்றம் கூட அந்த அமைப்பை வெகுவாக பாதிக்கும்.