குழந்தைகளும் உள நெருக்கிடுகளும் | What are the emotional problems of children?
இன்றைய சவால் மிக்க உலகைப் பொறுத்தவரை சிறுவர்கள் தமது அன்றாட வாழ்வில் ஏராளமான நெருக்கீடுகளுக்கும் உள, சமூகப் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர். முன்னைய காலங்களைப் போலன்றி இன்று கூட்டுக் குடும்பங்கள் என்ற நிலை மாறி குடும்பங்கள் தனித் தீவாக மாறி உள்ளன. தாய் ,தந்தை இருவரும் தொழில் உலகிற்குள் நுழையும் போக்கு இன்று அதிகரித்து வருகின்றது .இதனால் குழந்தைகளுக்கு உள நெருக்கீடுகள் அதிகரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.

ஒருசில குழந்தைகள் பிறக்கும் போதே பிறவிக் குறைபாடுகளுடன் பிறப்பர். இந்நிலை அவர்களது வாழ்வில் வெவ்வேறு நெருக்கீடுகளுக்கு காரணமாக அமையும். எனினும் வேறு சில பிள்ளைகள் வெவ்வேறு தனிப்பட்ட குடும்ப, பொருளாதார ,சமூகக் காரணிகளால் நெருக்கடிகளை எதிர்கொள்வர். இந்நெருக்கீடுகளை இவர்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதை பொறுத்து இவர்களின் வாழ்வில் அடுத்த கட்ட நகர்வு தீர்மானிக்கப்படும் .
சில சிறுவர்கள் தமக்கு ஏற்படும் நெருக்கீடுகளை தமது பெற்றோரின் ஆதரவுடன் வெற்றிகரமாக எதிர்கொள்கின்றனர். எனினும் துரதிஷ்டவசமாக சில பிள்ளைகளில் இந்த நெருக்கீடுகள் ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. குழந்தைகள் மத்தியில் ஏற்படும் இந் நெருக்கீடுகள் குடும்பத்திலிருந்தோ, பாடசாலையிலிருந்தோ, சமூகத்தில் இருந்தோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தோ கூட்டாக வந்திருக்கலாம். இவ்வாறு ஏற்படும் அனைத்து நெருக்கீடுகளும் தீவிர உள்ள நோயாக நோக்கப்படுவதில்லை. எனினும் இந்நெறுக்கீடுகள் பிள்ளைகளின் வளர்ச்சி மற்றும் விருத்தி படிநிலைகளையும் நாளாந்த வாழ்க்கை முறையையும் கற்றல் செயல்பாடுகளையும் பாதிக்கும். இது அவர்களின் எதிர்கால வாழ்வில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்த ஏதுவாய் அமையும் காரணியாக மாறிவிடும்.
நெருக்கீடு என்றால் என்ன?
நெறுக்கீடு என்பதை உளவியலாளர்கள் வெவ்வேறு கோணங்களில் ஆராய்ந்து பல்வேறு விளக்கங்களை முன் வைத்துள்ளனர். பொதுவாக பிள்ளைகள் ஒரு புதிய சூழல் அல்லது பிரச்சினைக்கு முகம் கொடுக்கும் போது அவர்களின் உடலிலும் உள்ளத்திலும் ஏற்படும் மாறுதல்களே நெருக்கீடாக உணரப்படுகிறது. நெருக்கீட்டின் விளைவாக குறித்த புதிய சூழலுக்கு தாம் எவ்வாறு எதிர்வினை ஆற்றுவது என்பதை அறியாது தவிக்கின்றனர். இதன் விளைவாக இவர்களிடையே பயம், பதட்டம், பதகளிப்பு, உளச்சோர்வு போன்ற பல உளவியல் சார் பிரச்சினைகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன.
இவ்வுள நெருக்கீடு பிரதானமாக இரண்டு வகையாக பிரித்து நோக்கப்படும்.
1.சாதாரண நெருக்கிடுகள்
2.பாரிய நெருக்கீடுகள்
சாதாரண நெருக்கிடுகள்.
சாதாரண நெருக்கீடுகள் என்னும் போது அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சிறு சிறு மாற்றங்களால் எதிர்கொள்ளப்படும் நெருக்கீடுகளை இது குறிக்கும்.
உதாரணம்
- குடியிருக்கும் வீட்டை விட்டு வேறு புது இடத்திற்கு மாறிச் செல்லல் .இதன் போது புதிய இடம், புதிய நபர்கள் ,புதிய சூழல் என்பவற்றைப் பழகும் வரை ஒருவகையான உள நெருக்கீட்டை எதிர்கொள்ளல்.
- வழமையாக படுத்து உறங்கும் இடம் மாறும் போது தூக்கமின்மை ஏற்படல். இதனால் உள நெருக்கீட்டை எதிர்கொள்ளல்.
- நீண்ட பயணங்கள் செல்லும் போது ஏற்படும் பயணக் களைப்பு, வழியில் ஏற்படும் அசௌகரியங்கள் என்பன சாதாரண உள நெருக்கீட்டை ஏற்படுத்தல்.
- பாடசாலையில் தொடர்ந்தும் ஒரே வகுப்பாசிரியரின் கீழ் கற்று வரும் பிள்ளைகள் திடீரென வகுப்பாசிரியர் மாறும் போது ஒரு வகை உள நெருக்கீட்டை எதிர்கொள்வர்.
இவ்வாறு அன்றாட வாழ்வில் பிள்ளைகள் சிறு சிறு உளநெறுக்கீடுகளை எதிர்கொள்வர். இவை சாதாரண உளநெருக்கீடுகள் ஆகும் .பிள்ளைகள் குறித்த சூழ்நிலைக்கு இசைவாக்கம் அடையும்போது நெருக்கீடு தீர்ந்து விடும்.
பாரிய நெருக்கீடுகள்
இவை சாதாரண உள நெருக்கீடுகளை போல் அன்றி மிகவும் பாரதூரமான நெருக்கீடுகள்ஆகும். இவை பாரிய உள நோய்களுக்கு வித்திடும் அளவிற்கு அபாயமானவை.
உதாரணம் ஏதாவது ஒரு பெரிய விபத்தை அல்லது அனர்த்தத்தை நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்து அதுபோல் மீண்டும் தனக்கு நேருமோ என்ற அச்சத்தில் உள நெருக்கீட்டிற்கு ஆளாதல்.
- சிறுவர் துஷ்பிரயோகங்கள் மூலம் நேரடியாக பாதிக்கப்பட்டு அதன் மூலம் நீண்டகால உள பாதிப்பிற்கு உள்ளாகுதல்.
- தாய் தந்தை அல்லது நெருங்கியவர்களின் இழப்பினால் ஏற்படும் உளப் பாதிப்பு.
- கொடிய நோய்களால் துன்புறுவதன் ஊடாக ஏற்படும் உடல் மற்றும் உளநெருக்கீடுகள்.
- இல்லத்து வன்முறைகளால் தொடராகப் பாதிக்கப்பட்டு வருவதால் ஏற்படும் உளநெறுக்கீடுகள் என பாரிய உள நெருக்கீடுகளை பட்டியல் படுத்திக் கொண்டு போகலாம்.
இவ்வாறு நெருக்கீட்டை ஏற்படுத்தும் காரணிகள் குடும்பம், பாடசாலை, சமூகம் போன்ற அனைத்து மட்டங்களில் இருந்தும் ஏற்படக்கூடும்.
எடுத்துக்காட்டாக இன்று ஏராளமான சிறுவர்கள் நெருங்கிய உறவுகளாலேயே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர்.
உள நெருக்கீட்டின் விளைவுகள்.
இவ்வாறு வெவ்வேறு காரணிகளால் ஏற்படும் உள நெருக்கீட்டின் விளைவாக கவலை, பயம், பதற்றம், பதகளிப்பு ,கோபம் என்பன ஏற்படும். இதனால் தசை இறுக்கம் ஏற்பட்டு தன்னியக்க நரம்பு தொகுதியின் கட்டுப்பாட்டின் கீழ் தசை இறுக்கம் தொடர்ந்து காணப்படும். இதனால் உடம்பின் பல பகுதிகளிலும் தசை நோவு ,தலைவலி, நெஞ்சு வலி, போன்ற உடல்சார் பிரச்சினைகள் ஏற்படும். இவை மீண்டும் கவலை பதற்றம் என்றவற்றை ஏற்படுத்தும். இவ்வாறு இது ஒரு தொடர்வட்டமாக நிகழ்ந்து கொண்டிருக்கும். அதேபோல் உள நெருக்கீட்டிற்கு உட்பட்ட சிறுவர்கள் சாதாரண நிலையில் இருந்து மாறி அசாதாரண நடத்தை உடைய பிள்ளைகளாக மாறுவர். இவர்களின் எண்ணங்களில் மாற்றம் ஏற்படும். வெவ்வேறு வித்தியாசமான எண்ணங்கள் இவர்களில் உள்ளத்தில் தோன்றும் .சில வேளை கொடூரமான எண்ணங்களாக இவை உருவெடுக்கும்.
அதேபோல் இவ்வெண்ணங்களின் விளைவாக இவர்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளில் பாரிய மாற்றம் ஏற்படும். இதன் விளைவாக இவர்கள் தம்மைச் சூழ உள்ள குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நண்பர்களுடன் உறவுப் பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்வர்.
அதேபோல் இந்நெறுக்கீடுகள் இவர்களைத் தவறான முடிவுகளின் பால் இட்டுச் செல்லும்.
எடுத்துக்காட்டாக இன்று எமது நாட்டில் கூட பல இளம் பாடசாலைப் பிள்ளைகள் தற்கொலை என்னும் கொடிய முடிவுக்கு சென்றதனை காணலாம். இதற்கு காரணம் இவர்களை பாதித்திருந்த இந்த உள நெருக்கீடே ஆகும்.
பரீட்சைத் தோல்விகள், தொலைபேசி பாவனையின் விளைவாக ஏற்பட்ட பாதகமான தொடர்புகளினால் ஏற்பட்ட நெருக்கீடுகள் என்பன இவற்றிற்கு காரணமாய் அமைந்துள்ளமையை கடந்த காலங்களில் அவதானிக்க முடிந்தது. அதுமட்டுமன்றி நீண்டகால உள நெருக்கீடு தண்ணியக்க நரம்புத் தொகுதியை தொடர்ந்தும் துண்டிய வண்ணம் இருக்கும். இது உடலின் நிர்பீடணத் தொழிற்பாட்டைப் பாதிக்கும். இதன் விளைவாக இவர்களின் இதயத்துடிப்பு வேகம் கூடுதல், சுவாச வேகம் கூடுதல், ஆஸ்துமா, குடற்புண், குடல் அழற்சி, வயிற்றோட்டம், வாந்தி ,எக்சிமா போன்ற தோல் அழற்சி நோய்கள் என்பன ஏற்படும்.
எனவே பிள்ளைகளில் ஏற்படும் நெருக்கீடுகள் தொடர்பில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மிக மிக அவதானமாக இருக்க வேண்டியது அவசியம்.
பிள்ளைகளின் நடத்தையில் ஏதாவது மாற்றம் ஏற்படும் போது அந்நடத்தை மாற்றம் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து அதற்கான காரணங்களை கண்டறிவது அவசியம்.
உள நெருக்கீடுடைய பிள்ளைகளைக் கையாளும் வழிமுறைகள்.
நெருக்கடிக்கு ஆளாகியுள்ள பிள்ளைகளை சரியாக இனம் கண்டு அவர்களை அந் அந்நிலையில் இருந்து வெளிக்கொண்டு வருவதற்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் விசேட வழிமுறைகளை கையாள்வது அவசியம். இதற்கு பல்வேறு அணுகுமுறைகளை உளவியல் நிபுணர்கள் வகுத்து தந்துள்ளனர். இவ்வழி முறைகளை கையாளும் போது நெருக்கடிக்கு ஆளாகியுள்ள பிள்ளையின் உளமுதிர்வு, சூழல், அவர்களின் நடத்தை என்பவற்றை கருத்தில் கொண்டு பொருத்தமான உதவி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் .இவ்வாறான செயற்பாடுகள் இயல்பாக்கல் முறைகள் எனப்படும் .அதாவது இயல்பாக்கல் முறை என்பது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு அப்பால் பிள்ளையுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் பிள்ளையை சுயாதீனமாக செயற்பட வழிப்படுத்துவதன் மூலம் பிள்ளையின் உள்ளத்தில் உணர்வுச் சமநிலையையும் சீரான செம்மையான நடத்தையையும் உருவாக்க மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்.
இவற்றை பின்வருமாறு வகைப்படுத்தி நோக்கலாம்.
- செவிமடுத்தல்
பிள்ளைகளின் உள்ளத்தில் எழும் நெருக்கீட்டை குறைப்பதற்கான மிக அடிப்படையான காரணி செவிமடுத்தலாகும். பிள்ளைகளுக்கு மட்டுமன்றி வளர்ந்தவர்கள் மத்தியில் ஏற்படும் நெருக்கீட்டைக் கையாளவும் இது மிகச் சிறந்த ஒரு வழிமுறையாகும். ஒரு பிள்ளையின் முறைப்பாட்டை நடுநிலையான பெரியவர் ஒருவர் அக்கறையோடும், கரிசனையோடும் உற்றுக் கேட்டாலே பிள்ளையை பாதித்துள்ள நெருக்கீடு பாதி குறைந்து விடும்.
பொதுவாக சிறுவர்களை மதித்து அவர்களது கூற்றுக்களுக்கு செவி சாய்த்து அவர்களின் கருத்துக்களை வரவேற்கும் போது அவர்கள் உலகில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது கண் கூடு.
- முரண்பாடுகளை சமூகமாக தீர்த்தல்.
பிள்ளைகள் மத்தியில் உள நெருக்கீட்டை ஏற்படுத்துவதற்கு பிறிதொரு காரணி வீடுகளில், பாடசாலைகளில் ஏற்படும் முரண்பாடுகள் ஆகும். முரண்பாடுகள் தொடர்ந்து செல்லும் போது அவை நீண்ட கால நெருக்கீடுகளுக்கு காரணமாக அமையும். எனவே மிக அவதானமாக பொருத்தமான முறைகளைக் கையாண்டு முரண்பட்டவர்களிடையே சுமுகநிலையை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும். இதனால் பிள்ளைகளின் உள்ளம் அமைதி அடைய சந்தர்ப்பம் கிட்டும்.
- கோபத்தை முறையாக கையாள வழிகாட்டல்
பிள்ளைகளின் உளநெறுக்கீட்டுக்கு பிரதான காரணமாக அமையும் பிரிதொரு காரணி கோபமாகும். சில பிள்ளைகள் இயல்பிலேயே கோப உணர்வு மிக்கவர்களாக காணப்படுவர். இவர்களின் கோபம் பிள்ளைகளுக்கு மட்டுமின்றி சுற்றி இருப்பவர்களுக்கும் நெருக்கீட்டை ஏற்படுத்திவிடும்.
இத்தகைய பிள்ளைகளுக்கு சில உளவியல் பயிற்சிகளை அளிப்பதன் ஊடாக இவர்களின் கோபத்தினைக் கட்டுப்படுத்தி உள்ளத்தை அமைதி அடைய செய்ய வழிகாட்டலாம்.
எடுத்துக்காட்டாக
- ஆழமாக சுவாசிக்கச் செய்தல்
- குளிர்ந்த நீரை ஆறுதலாக பருகச் செய்தல்.
- ஒரு குறிப்பிட்ட தூரம் நடந்து விட்டு வருமாறு கூறல்.
- இசைக்கருவிகளை இசைக்கச் செய்தல்.
- பந்தொன்றை வழங்கி அதனை எறிந்து விளையாடச் செய்தல்.
இவ்வாறு ஏதாவது சாந்தப்படுத்தும் வழிமுறைகளை கையாளும் போது பிள்ளையின் மனதில் கோபத்தினால் ஏற்படும் நெருக்கீட்டை இது இயல்பாகவே குறைந்துவிடும்.
- கலைகளின் பக்கம் நாட்டம் செலுத்தச் செய்தல். - கலைகள் மனித மனதை ஆற்றுப்படுத்தக் கூடியவை .கலைகளின் பக்கம் திரும்பும் போது மனித மனம் இயல்பாகவே அமைதி அடைய ஆரம்பிக்கும்.
- ஆடல், பாடல், ஓவியம் வரைதல், கவிதை எழுதுதல் ,இசையை ரசித்தல் ,கதைகள் வாசித்தல் என கலைகளின் பட்டியல் நீண்டு செல்லும்.
எனவே நீண்டகால நெருக்கீடுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் பிள்ளைகளை அந் நெருக்கடி நிலையிலிருந்து வெளியே கொண்டு வருவதற்கு குறித்த பிள்ளை நாட்டம் செலுத்தும் ஏதாவது ஒரு அம்சத்தை இனம் கண்டு அத்துறையில் ஈடுபாடு காட்டுவதற்கு உதவி செய்யலாம்.
உதாரணமாக நெருக்கீட்டிற்கு உள்ளாகியுள்ள பிள்ளை சிறந்த ஓவியம் வரையும் ஆற்றில் உள்ள பிள்ளையாயின் ஓவியம் வரைதலில் நாட்டத்தை திருப்பி விடலாம். இதன் பொருட்டு ஓவியம் வரைவதற்கு தேவையான சாதனங்களை பெற்றுக் கொடுக்கலாம். வகுப்பு மட்டத்தில் சிறிய ஒரு ஓவியக் கண்காட்சியை ஒழுங்கு செய்து குறித்த பிள்ளையின் ஓவியங்களை காட்சிப்படுத்தும் சந்தர்ப்பம் ஒன்றை உருவாக்கலாம். ஊக்குவிப்புப் பரிசில்களை வழங்கலாம் .அதே போல் மேலும் ஒரு படி முன்னேறி பிள்ளையின் ஓவியத்தை சமூக வலைத்தளங்களின் ஊடாகவோ அல்லது இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாகவோ பிரபலமடைய செய்யலாம். இவ்வாறு குறித்த பிள்ளையின் பின்னால் நின்று தூண்டுதலை வழங்கிக் கொண்டிருக்கும்போது இயல்பாகவே பிள்ளையின் மனம் கலைகளின் பக்கம் ஈர்க்கப்பட்டு நெருக்கடியற்ற மனனிலையில் சாதாரணமான வாழ்க்கைக்குள் நுழைவர். பாரிய உள நெருக்கடிகளுக்கு உள்ளாகி உள்ள பிள்ளைகளை அவற்றிலிருந்து மீளச் செய்ய இது சிறந்த முறையாகும்.
- இயற்கையை ரசிக்க கற்றுக் கொடுத்தல்.
அன்றாட வாழ்வில் ஏற்படும் சிறுசிறு நெருக்கடிகளை எதிர்கொள்ள பிள்ளைகளுக்கு இயற்கையை ரசிக்க கற்றுக் கொடுப்பது சிறந்த ஒரு தீர்வாகும். இயற்கையின் அழகில் மனதை லயிக்கச் செய்தல், இயற்கைக் காட்சிகளை மனதில் கற்பனை செய்து கொள்ளச் செய்தல் என்பன நெருக்கீடுகளை எதிர்கொள்ள சிறந்த வழிமுறையாக அமையும்.
- உளவளத் துணையை நாடல்
சாதாரண நெருக்கீடன்றி பாரிய அளவிலான நெருக்கீடுகளை எதிர்கொண்டு மிகத் தீவிரமான உளவியல் சார் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள பிள்ளைகளுக்கு கட்டாயம் உளவளத் துணையாளர் ஒருவரின் உதவி தேவைப்படும். சில நேரங்களில் உளவியல் சிகிச்சையும் வழங்க நேரிடலாம். இத்தகைய பிள்ளைகளை எளிதாக கையாள்வது கடினம். இவர்களுக்கு நீண்டகால உள சிகிச்சையும் உளவளத் துணையையும் வழங்குவதன் ஊடாக படிப்படியாக இவர்களை அந்நிலையில் இருந்து மீட்டுக் கொண்டு வர முடியும் .
இவ்வாறு பிள்ளைகளின் மனதில் ஏற்படும் நெருக்கீடுகளை பெரியவர்கள் மிகவும் அவதானமாகவும் பொறுமையுடனும் கையாள்வது அவசியம். இன்றேல் பிள்ளைகள் நெருக்கீடுகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு அவர்களின் வாழ்க்கையில் தவறான முடிவுகளை எடுக்கக்கூடிய அல்லது குற்றச் செயல்களின் பக்கம் ஈர்க்கப்பட்டு விடக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும்.
எனவே இந்நிலையை தவிர்ப்பதற்கு சிறுவர்களின் மனதை ஆழமாக புரிந்து கொள்வோம். அவர்களின் வாழ்வில் ஏற்படும் நெருக்கீடுகளை சாதாரண சூழ்நிலைக்கு கொண்டு வருவதற்கு பெரியவர்கள் ஆகிய நாம் கட்டாயம் முயற்சி செய்வோம்
Whats Your Reaction?






